Wednesday, September 4, 2013

மூன்றாவது தெய்வம் குருவை வணங்குவோம்...

என்  கல்வி அனுபவம் நீண்ட கட்டுரையாக மாறியது:::நேரம் உள்ளவர்கள் படிக்கலாம்...

ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினம் வரும் போது என் மனதில் இருக்கும் சில ஆசிர்யர்க
ளை நினைவு கூறுவேன். அவர்கள் ஒவ்வொருவரையும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்..

   எனக்கு ஆரம்ப பள்ளியில் சொல்லி கொடுத்த ஆசிரியர்கள் அந்த அளவுக்கு நினைவில் இல்லை என்றாலும் எனக்கு எழுத்து அறிவித்தவர்கள் அவர்கள்தான். நான் படித்த அந்த ஆரம்ப பள்ளி தமிழ் வழி கல்வியை மட்டும் கொண்ட திருச்சி இருதயபுரம் பகுதியில் உள்ள புனித ஸ்டனிஸ்லாஸ் நடுநிலை பள்ளி ஐந்தாம் வகுப்பு வரை ஆண்களுக்கு உள்ளடக்கியது...என்னுடன் படித்த நண்பர்களும் தெரு நண்பர்களும் பெரிய பெரிய பள்ளிகூடங்களில் அடுத்த வகுப்பு சேர்ந்த போது சூழ்நிலை காரணமாக வீட்டிக்கு அருகில் உள்ள மற்றொரு நடு நிலை பள்ளியில் சேர்ந்தேன்...அதற்க்கு திரு இருதய நடு நிலை பள்ளி என்ற பெயர் இருந்தாலும் எல்லோரும் ரோட்டு பள்ளி கூடம் என்று சொல்வார்கள்...அந்த பள்ளியில் நான் சேர்ந்த போது ஆறாம் வகுப்பு எடுத்த ஆசிரியைகளும் குறிப்பாக கமலம் ஆசிரியை எனக்கு கொடுத்த ஊக்கம் தான் என்னை ஒரு நல்ல மாணவனாக உருவாகியது என சொல்லலாம்...அந்த பள்ளியில் நான் பார்த்த ஆசிரியர்கள் அவர்கள் பணியை மிக அருமையாக செய்தார்கள். ஆனால் இப்பொழுது அந்த பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறைவால் ஆரம்ப பள்ளியாக குறைக்க பட்டு உள்ளது..எல்லோரும் ஆங்கில வழி பள்ளிகளில் சேர்த்தால் இது போன்ற பள்ளிகளின் நிலை அழியும் தருவாயில் உள்ளது...

ஒன்பதாம் வகுப்பில் சேர திருச்சியில் நல்ல பெயர் உள்ள புனித வளனார் கல்லூரி பள்ளியில்  சேர்ந்தேன்..பெரிய பள்ளி கூடம்...அங்கு சேர்ந்தவுடன் புதிதாக சேர்ந்தவர்கள்  எல்லாம் நன்றாக படிக்க மாட்டார்கள் என வரும் ஆசிரயர் எல்லாம் சொன்னார்கள்..ஆனால் நடந்த முதல் தேர்விலே முதல் மாணவனாக  வந்த போது முந்தைய பள்ளி ஆசிர்யர்களைதான் நினைவு கொண்டேன்...இந்த பள்ளியிலும் சில ஆசிர்யர்கள் குறிப்பாக கணிதம், அறிவியல் பாடங்களை எனக்கு  சொல்லி தந்த ஆசிர்யர்கள் நான் டியூஷன் இல்லாமல் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் தமிழ் வழி கல்வியில் எடுக்க உதவி செய்தார்கள்....

பள்ளி முடிந்து நான் ஜெ.ஜெ பொறியியல் கல்லூரியில்  எனக்கு கவுன்செல்லிங் மூலம்  சேர்ந்தேன்...முதல் ஆண்டு தமிழ் வழி கல்வியில் இருந்து ஆங்கிலம் வழி படிக்க கடினமாக இருந்தது...கான்வென்ட்டில் ஆங்கிலம் படித்து  விரிவுரையாளருடன் விவாதிக்கும் போது பார்த்தால் கொஞ்சம் நமக்கு தாழ்வு மனப்பான்மை வரத்தான் செய்தது...ஆனால் போக போக   இதெல்லாம் ஒன்று இல்லை என தோன்றியது...சுய நிதி பொறியியல் கல்லூரிகள் குறைந்த ஊதியத்துக்கு எடுத்திருக்கு விரிவுரையாளர்கள் சில பேர்  வந்து ஒப்பித்து செல்வது போல செல்வார்கள்..ஆனால் எனக்கு வந்த பல   விரிவுரையாளர்கள் முயற்சி எடுத்து பாடம் சொல்லி தந்தவர்கள்....எனக்கு இரண்டாம் ஆண்டு  வகுப்பு எடுத்த தில்லைக்கரசி என்ற விரிவுரையாளர் எடுத்த  கணி மொழி Fortran and C  என்பதுதான் எனக்கு இப்பொழுது செய்யும் நான் வேலைக்கு அடிப்படை...அவரின் நடத்தும் முறை நிறைய பேருக்கு பிடிக்காது என்றாலும்  எனக்கு அடித்து சொல்லி கொடுப்பது போலவே இருந்தது...எனக்கு என் துறையில் எடுத்த சிலர் குறிப்பாக விரிவுரையாளர்கள்  காயத்ரி ,தயாளினி மற்றும் செந்தில் அரசு  அவர்கள் பாடம் மட்டும் இல்லாமல் வேலை வாய்ப்பு குறித்த விளக்கங்கள் வகுப்பில் பகிர்ந்ததால்   மற்ற விரிவுரையாளர்களை விட  ஒரு படி அவர்களை பார்க்க தோன்றியது...எனது   ப்ராஜெக்ட்  நேரத்தில் ஊக்கம் அளித்த துறை தலைவர் அவர்களின் அறிவுரையும்  எப்போதும் என் மனதில் இருக்கும்....

 கல்லூரி முடித்த சமயம் எல்லா தனியார் துறைகளும் பொருளாதார் மந்த நிலை காரணமாக வேலை வாய்ப்பை குறைத்து கொண்ட சமயம்......என்ன செய்வது என்று யோசித்த பிறகு எனக்கு விரிவுரையாளராக   அழைப்பு  கொடுத்து என் கணினி துறையில் பயணிக்க வைத்த அப்பொழுது கல்லூரி இயக்குனராக இருந்த  திரு சண்முகநாதன் அவர்கள்தான் எனக்கு எல்லோரையும் விட இந்த ஆசிரய உலகில் தெய்வமாக தோன்றுகிறார்.. அதற்க்கு பிறகு அப்போது IT துறையின் தலைவராக இருந்த ஷீபா மேடமும்   கொடுத்த ஊக்கம் என் கணினி அறிவை வளர்க்க உதவியது...பொருளாதாரம்  என்பதை உயர்த்த இவர்களிடம் இருந்து நான்  மென் பொருள் கம்பெனி க்கு   பணி புரிய சென்றேன்...


எனது விரிவுரையாளர் பணி நன்றாக தொடங்கியது..நட்புடன் பழகினால் நிறைய கற்று தர முடியும் என மாணவர்களிடம் ஒரு கல்லூரி சீனியர் போலதான் பழகி வந்தேன்...ஆனால் கடைசியாக பல மாணவர்களிடமும் கடுமையாக நடந்து கொள்ளும் மன நிலை எப்படி வந்தது என தெரியவில்லை...   சில மாணவர்களே காரணம்..ஆனால் அப்போது இருந்த மன நிலை வேறு...ஆனால் இப்போது என் மாணவர்கள் யாரை பார்த்தாலும் ஒரு மகிழ்ச்சி வரும்...சில மாணவர்கள் இன்றும் மறக்காமல் ஆசிரிய தின வாழ்த்துக்க சொல்வார்கள்.....இன்றும் என் கனவில் அதிகம் வருவது என் கல்லூரி தான்...

நான் என் கல்லூரி பணி காலத்தில் புரிந்து கொண்டது இதுதான்..கல்லூரி மாணவர்களுக்கு  பாடம் மட்டும் சொல்லி கொடுத்து பயன் இல்லை...அதற்க்கு மேல் வேலை வாய்ப்பு, வாழ்க்கை முறை எல்லாவற்றிலும்   வழி காட்டியாக இருக்க வேண்டும் என..நான் உணர்ந்த போது அந்த வேலையை விட்டு வந்து விட்டேன்.....எனக்கு பன்னிரெண்டாம் வகுப்பில் தமிழ் ஆசிரயர் திரவியம் சொல்வார்   "உண்மையான ஆசிரியருக்கு 24 மணி நேரம் வேலை இருக்கும்". அவர் வகுப்புகளில்   தமிழால் இன்புற்ற மாணவன் நான்..பல அறிவியல் வகுப்புக்கு இடையில் அவர் வகுப்பு   நகைசுவயுடனும் வாழ்வியல் கல்வியுடனும் செல்லும்...என் மனதில் நின்ற நிறைய ஆசிர்யர்களை நான் பள்ளி கல்லூரி விட்டு வந்து பார்க்க முடிய வில்லை....கூடிய விரைவில் பார்க்க வேண்டும்....

இன்றைய காலத்தில் கைபேசி இணையம் தொலைக்காட்சி என்று பல மீடியாக்களின் தாக்கத்தால் இருக்கும் தலைமுறைக்கு  நல்ல கல்வியை சேர்ப்பது ஆசிரிய உலகத்தில் சவாலாக இருக்கிறது....அந்த சவாலை எதிர்க்கொண்டு   நல்ல தலைவர்களை உருவாக்க ஆசிரியர்கள் எல்லோருக்கும்  ஆசிரியர்  தினத்தை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்...