Wednesday, September 4, 2013

மூன்றாவது தெய்வம் குருவை வணங்குவோம்...

என்  கல்வி அனுபவம் நீண்ட கட்டுரையாக மாறியது:::நேரம் உள்ளவர்கள் படிக்கலாம்...

ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினம் வரும் போது என் மனதில் இருக்கும் சில ஆசிர்யர்க
ளை நினைவு கூறுவேன். அவர்கள் ஒவ்வொருவரையும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்..

   எனக்கு ஆரம்ப பள்ளியில் சொல்லி கொடுத்த ஆசிரியர்கள் அந்த அளவுக்கு நினைவில் இல்லை என்றாலும் எனக்கு எழுத்து அறிவித்தவர்கள் அவர்கள்தான். நான் படித்த அந்த ஆரம்ப பள்ளி தமிழ் வழி கல்வியை மட்டும் கொண்ட திருச்சி இருதயபுரம் பகுதியில் உள்ள புனித ஸ்டனிஸ்லாஸ் நடுநிலை பள்ளி ஐந்தாம் வகுப்பு வரை ஆண்களுக்கு உள்ளடக்கியது...என்னுடன் படித்த நண்பர்களும் தெரு நண்பர்களும் பெரிய பெரிய பள்ளிகூடங்களில் அடுத்த வகுப்பு சேர்ந்த போது சூழ்நிலை காரணமாக வீட்டிக்கு அருகில் உள்ள மற்றொரு நடு நிலை பள்ளியில் சேர்ந்தேன்...அதற்க்கு திரு இருதய நடு நிலை பள்ளி என்ற பெயர் இருந்தாலும் எல்லோரும் ரோட்டு பள்ளி கூடம் என்று சொல்வார்கள்...அந்த பள்ளியில் நான் சேர்ந்த போது ஆறாம் வகுப்பு எடுத்த ஆசிரியைகளும் குறிப்பாக கமலம் ஆசிரியை எனக்கு கொடுத்த ஊக்கம் தான் என்னை ஒரு நல்ல மாணவனாக உருவாகியது என சொல்லலாம்...அந்த பள்ளியில் நான் பார்த்த ஆசிரியர்கள் அவர்கள் பணியை மிக அருமையாக செய்தார்கள். ஆனால் இப்பொழுது அந்த பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறைவால் ஆரம்ப பள்ளியாக குறைக்க பட்டு உள்ளது..எல்லோரும் ஆங்கில வழி பள்ளிகளில் சேர்த்தால் இது போன்ற பள்ளிகளின் நிலை அழியும் தருவாயில் உள்ளது...

ஒன்பதாம் வகுப்பில் சேர திருச்சியில் நல்ல பெயர் உள்ள புனித வளனார் கல்லூரி பள்ளியில்  சேர்ந்தேன்..பெரிய பள்ளி கூடம்...அங்கு சேர்ந்தவுடன் புதிதாக சேர்ந்தவர்கள்  எல்லாம் நன்றாக படிக்க மாட்டார்கள் என வரும் ஆசிரயர் எல்லாம் சொன்னார்கள்..ஆனால் நடந்த முதல் தேர்விலே முதல் மாணவனாக  வந்த போது முந்தைய பள்ளி ஆசிர்யர்களைதான் நினைவு கொண்டேன்...இந்த பள்ளியிலும் சில ஆசிர்யர்கள் குறிப்பாக கணிதம், அறிவியல் பாடங்களை எனக்கு  சொல்லி தந்த ஆசிர்யர்கள் நான் டியூஷன் இல்லாமல் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் தமிழ் வழி கல்வியில் எடுக்க உதவி செய்தார்கள்....

பள்ளி முடிந்து நான் ஜெ.ஜெ பொறியியல் கல்லூரியில்  எனக்கு கவுன்செல்லிங் மூலம்  சேர்ந்தேன்...முதல் ஆண்டு தமிழ் வழி கல்வியில் இருந்து ஆங்கிலம் வழி படிக்க கடினமாக இருந்தது...கான்வென்ட்டில் ஆங்கிலம் படித்து  விரிவுரையாளருடன் விவாதிக்கும் போது பார்த்தால் கொஞ்சம் நமக்கு தாழ்வு மனப்பான்மை வரத்தான் செய்தது...ஆனால் போக போக   இதெல்லாம் ஒன்று இல்லை என தோன்றியது...சுய நிதி பொறியியல் கல்லூரிகள் குறைந்த ஊதியத்துக்கு எடுத்திருக்கு விரிவுரையாளர்கள் சில பேர்  வந்து ஒப்பித்து செல்வது போல செல்வார்கள்..ஆனால் எனக்கு வந்த பல   விரிவுரையாளர்கள் முயற்சி எடுத்து பாடம் சொல்லி தந்தவர்கள்....எனக்கு இரண்டாம் ஆண்டு  வகுப்பு எடுத்த தில்லைக்கரசி என்ற விரிவுரையாளர் எடுத்த  கணி மொழி Fortran and C  என்பதுதான் எனக்கு இப்பொழுது செய்யும் நான் வேலைக்கு அடிப்படை...அவரின் நடத்தும் முறை நிறைய பேருக்கு பிடிக்காது என்றாலும்  எனக்கு அடித்து சொல்லி கொடுப்பது போலவே இருந்தது...எனக்கு என் துறையில் எடுத்த சிலர் குறிப்பாக விரிவுரையாளர்கள்  காயத்ரி ,தயாளினி மற்றும் செந்தில் அரசு  அவர்கள் பாடம் மட்டும் இல்லாமல் வேலை வாய்ப்பு குறித்த விளக்கங்கள் வகுப்பில் பகிர்ந்ததால்   மற்ற விரிவுரையாளர்களை விட  ஒரு படி அவர்களை பார்க்க தோன்றியது...எனது   ப்ராஜெக்ட்  நேரத்தில் ஊக்கம் அளித்த துறை தலைவர் அவர்களின் அறிவுரையும்  எப்போதும் என் மனதில் இருக்கும்....

 கல்லூரி முடித்த சமயம் எல்லா தனியார் துறைகளும் பொருளாதார் மந்த நிலை காரணமாக வேலை வாய்ப்பை குறைத்து கொண்ட சமயம்......என்ன செய்வது என்று யோசித்த பிறகு எனக்கு விரிவுரையாளராக   அழைப்பு  கொடுத்து என் கணினி துறையில் பயணிக்க வைத்த அப்பொழுது கல்லூரி இயக்குனராக இருந்த  திரு சண்முகநாதன் அவர்கள்தான் எனக்கு எல்லோரையும் விட இந்த ஆசிரய உலகில் தெய்வமாக தோன்றுகிறார்.. அதற்க்கு பிறகு அப்போது IT துறையின் தலைவராக இருந்த ஷீபா மேடமும்   கொடுத்த ஊக்கம் என் கணினி அறிவை வளர்க்க உதவியது...பொருளாதாரம்  என்பதை உயர்த்த இவர்களிடம் இருந்து நான்  மென் பொருள் கம்பெனி க்கு   பணி புரிய சென்றேன்...


எனது விரிவுரையாளர் பணி நன்றாக தொடங்கியது..நட்புடன் பழகினால் நிறைய கற்று தர முடியும் என மாணவர்களிடம் ஒரு கல்லூரி சீனியர் போலதான் பழகி வந்தேன்...ஆனால் கடைசியாக பல மாணவர்களிடமும் கடுமையாக நடந்து கொள்ளும் மன நிலை எப்படி வந்தது என தெரியவில்லை...   சில மாணவர்களே காரணம்..ஆனால் அப்போது இருந்த மன நிலை வேறு...ஆனால் இப்போது என் மாணவர்கள் யாரை பார்த்தாலும் ஒரு மகிழ்ச்சி வரும்...சில மாணவர்கள் இன்றும் மறக்காமல் ஆசிரிய தின வாழ்த்துக்க சொல்வார்கள்.....இன்றும் என் கனவில் அதிகம் வருவது என் கல்லூரி தான்...

நான் என் கல்லூரி பணி காலத்தில் புரிந்து கொண்டது இதுதான்..கல்லூரி மாணவர்களுக்கு  பாடம் மட்டும் சொல்லி கொடுத்து பயன் இல்லை...அதற்க்கு மேல் வேலை வாய்ப்பு, வாழ்க்கை முறை எல்லாவற்றிலும்   வழி காட்டியாக இருக்க வேண்டும் என..நான் உணர்ந்த போது அந்த வேலையை விட்டு வந்து விட்டேன்.....எனக்கு பன்னிரெண்டாம் வகுப்பில் தமிழ் ஆசிரயர் திரவியம் சொல்வார்   "உண்மையான ஆசிரியருக்கு 24 மணி நேரம் வேலை இருக்கும்". அவர் வகுப்புகளில்   தமிழால் இன்புற்ற மாணவன் நான்..பல அறிவியல் வகுப்புக்கு இடையில் அவர் வகுப்பு   நகைசுவயுடனும் வாழ்வியல் கல்வியுடனும் செல்லும்...என் மனதில் நின்ற நிறைய ஆசிர்யர்களை நான் பள்ளி கல்லூரி விட்டு வந்து பார்க்க முடிய வில்லை....கூடிய விரைவில் பார்க்க வேண்டும்....

இன்றைய காலத்தில் கைபேசி இணையம் தொலைக்காட்சி என்று பல மீடியாக்களின் தாக்கத்தால் இருக்கும் தலைமுறைக்கு  நல்ல கல்வியை சேர்ப்பது ஆசிரிய உலகத்தில் சவாலாக இருக்கிறது....அந்த சவாலை எதிர்க்கொண்டு   நல்ல தலைவர்களை உருவாக்க ஆசிரியர்கள் எல்லோருக்கும்  ஆசிரியர்  தினத்தை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்...


Sunday, April 14, 2013

தாய் பூமியின் நலம்


திருச்சி மாநகருக்கு உட்பட்ட சங்கில்யாண்டபுரம், காஜாபேட்டை , மிளகுபாறை , பெல்சி கிரௌண்ட், பாலக்கரை என்ற இடங்களில் அடிக்கடி கொலை வெட்டு குத்து என்று 15 வருடங்களுக்கு முன்னர் தினசரி நாளிதழ்களில் செய்திகள் வரும்.மக்களும் அங்கே தலை இருக்கிறது..அங்கே பிணம் இருக்கிறது என்று அடிக்கடி சொல்வார்கள்..நான் அந்த பகுதிகளுக்கு அருகில்தான் வளர்ந்தேன்..தீபாவளி சமயத்தில் ஒரு கொலை நடந்து பிணத்தை நேரில் பார்த்த அனுபவம்..ரௌடிசதிற்கு பேர் போன இடம் அப்போது..நான் கல்லூரியில் ஒரு முறை அந்த பகுதியில் இருந்து வருகிறேன் என்று சொன்ன போது இனிமேல் உன்னிடம் பார்த்து நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார் ஒரு விரிவுரையாளர்..அப்படிப்பட்ட ஏரியாவில் ஒரு காலத்தில் கட்ட பஞ்சாயத்து செய்தவர்கள் தான் இன்று தமிழகத்தின் பெரிய கட்சிகளின் அரசியல தலைகள்.. அவர்கள் குடும்பத்திலே கொலைகளும் நடந்தன..தன் குடும்பத்தில் அந்த மரணங்களுக்கு பிறகு அவர்களும் கொஞ்சம் பழிக்கு பழி என்பதை விட்டனர்...அரசியல் ஆதாயத்துக்கா இல்லை பயத்தினால என்று தெரியவில்லை...ஆனால் இன்று அது போன்ற கொலை செய்திகள் வருவதில்லை. காலம் சில சமயங்களில் அதுவே தீர்ப்பு சொல்லி விதுகிறது.ரௌடிகள் கூட்டம் இல்லாமல் இல்லை..ஆனால் இந்த பெரும் புள்ளிகளின் வாழ்வில் பின்னடைவு ஏற்பட்டதால்...இன்று இந்த பகுதிகளில் நிறைய இன்ஜினியரிங் மருத்துவம் படிக்கும் மாணவர்கள். முன் போன்ற கலவரங்கள் இல்லை...ராம ஜெயம் கொலைதான் மிக நீண்ட நாட்கள் பிறகு நாங்கள் கேள்வி பட்ட கொலை..ஆனால் அதற்க்கு இப்பகுதி ரௌடிகளோ மனிதர்களோ காரணம் இல்லை...இந்த பகுதி மக்கள் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைந்துள்ளனர்.சுகாதாரம் மட்டும் இன்னும் மேம்பாடு அடைய வேண்டும்..இங்கு பெரிய கட்சிகள்தான் மாற்றி மாற்றி தேர்தலில் வெற்றி பெரும்...ஆனால் இன்னும் கிராமம் நகரம் இரண்டுக்கும் இடையில் இருக்கும் பகுதியாகத்தான் இருக்கிறது..நான் சில சமயங்களில் பெங்களூர் கொச்சின் நகரங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பேன் . அமெரிக்கா போல ஆகா வேண்டாம்..ஆனால் ஒரு மாநகரம் என்று சொல்லும் அளவுக்கு ஆக வேண்டாமா...திருச்சியை சேர்ந்த பாரதிதாசன் பல்கலை கழகத்தில்தான் முதல் முதலில் கணிபொறி பிரிவில் நிறைய மாணவர்கள் வெளி வந்ததாக சொல்வார்கள்..அவர்களின் திறமை இந்த பகுதி வளர்ச்சிக்கு பயன்பட்டதா என தெரியவில்லை.=நான் வளர்ந்த மண்ணுக்காக நான் எண்ணிய எண்ணங்கள்....என் முக நூலில் இந்த பகுதி நண்பர்கள் மிக சிலரே. இந்த ரௌடிசம் கட்ட பஞ்சாயத்து பார்த்துதான் நிறைய படித்த மக்களுக்கு அரசியல் மேல் ஒரு வெறுப்புணர்ச்சி..ஆனால் இந்த பதிவின் நோக்கம் இதுதான் "சும்மா அரசியலையே குறை சொல்லாமல் படித்த இளைய தலை முறையினர் பொது வாழ்வில் வர வேண்டும்..பணம் என்ற ஒன்றில் இருக்கும் ஆதிக்க அரசியலை மாற்ற வேண்டும்.....இந்தியா வல்லரசு என்ற பெரிய நோக்கம் எல்லாம் தேவை இல்லிங்க..நம்ம இருக்கிற பகுதி முதல்ல முன்னேற்றினால் போதும். எனக்கும் இந்த என்னத்தை நானே விதைத்து கொளுகிறேன். இந்த பதிவின் வழியாக "

பிரியமானவர்களின் மரணம்...

இந்த சோக நிகழ்வு நடந்து பத்து வருடங்கள் ஆகி விட்டது. என் கல்லூரி நண்பர் எடிசனின் குடும்பத்தில் நடந்த நிகழ்வு..அவனது தாயார் திடீர் மரணம் அடைந்தது.. நான் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் அவர்கள் குழந்தையின் ஒருவராக என்னை பார்த்த என் இன்னொரு அன்னை..என் 5 வயதுக்கு முன்னரே என் தந்தை இறந்து விட்டார்...அவர் இறந்த போது எனக்கு அவ்வளவு விவரம் தெரியவில்லை..எனக்கு விவரம் தெரிந்து மிக வலியை கொடுத்த இறப்புகளில் இவர் இறப்பும் ஒன்று.

           நாங்கள் கல்லூரி பொறியியல் படிப்பை முடித்த பிறகு நல்ல வேலையில் அமர கிடைத்த வேலையில் இருந்த சமயம்...நான் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த சமயம்..ஒரு சண்டே மாலை..கடை வீதிக்கு சென்று வந்த பிறகு வீட்டிற்கு வந்தவுடன் எனக்கு அழைப்பு வந்ததாகவும் எடிசன் அம்மா இறந்து விட்டதாகவும் சொன்னார்கள்..இதை சொன்ன என் உறவினரிடம் நன்றாக கேட்டீர்களா அவர்கள் பாட்டியாக இருக்கும் என்று சொன்னேன்..இல்லை இல்லை..நன்றாக கேட்டோம் என்றார்கள்..மனம் துடித்து போனது. இரண்டு நாள் முன்தான் தொலைபேசியில் பேசினோம் என்ன ஆச்சு என்று.. அப்பொழுது மொபைல் அவ்வளவு பழக்கத்தில் இல்லை. உடனே அவர்கள் இறுதி சடங்கு செய்ய திருச்சியில் இருந்து திண்டுக்கல் சென்று விட்டனர். அவரது உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு நானும் அவர்களின் திண்டுக்கல் வீட்டிற்கு சென்றேன். என்னை பார்த்த உடன் என் நண்பன் ஓடி வந்து புரண்டு ஒரு குழந்தையாக அழுத காட்சி இன்றும் நினைவலையில் வலியாக. எனக்கு பிறகு சில கல்லூரி நண்பர்களும் வந்தார்கள்..இறுதி சடங்கு முடியும் வரை இருந்து திரும்பினோம்...

                 எப்படி அந்த திடீர் மரணம் நிகழ்த்து? அவர் தமிழ்நாடு மின் துறையில் அலுவலக பணியாளராக இருந்தவர்..இரண்டாம் வார சனி விடுமுறை...வீட்டில் காலை துணி துவைக்கும் போது திடீர் என தலை வலிக்கிறது என்று உட்கார்ந்தவர் நண்பனை அழைத்தார்..அவன் தைலம் தடவும் போது மயக்கம் அடைந்த அம்மாவை நண்பரும் அவர் தந்தையரும் அருகில் இருக்கும் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்..அங்கு இரண்டு மணி நேரம் கடந்தும் மயக்கம் தெளியததால் திருச்சி மாருதி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்..அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது மூளைக்கு செல்லும் ஒரு நரம்பு வெடித்து விட்டதாக அதிர்ச்சி தகவல் சொன்னார்கள்..அத்துடன் தங்களால் முடியாத நிலையை மருத்துவர் சொன்ன உடன் சிறிது நேரத்தில் இறந்தார்..அலுவலகத்திலும் வேலை செய்வதில் நல்ல பெயர் வாங்கிய அன்னை..குடும்ப தலைவியாக வீட்டில் எல்லா வேலைகளையும் செய்ததோடு மட்டும் அல்லாமல் உறவினகள் அனைவர்டமும் அன்பாக பழகுபவர்..அவர் எல்லா உறவினர்களுக்கும் உதவி செய்பவர்...நான் கல்லூரி படிக்கும் போது நண்பருடன் சண்டைகள் வந்த போது எனக்காக பேசி எங்களை சமாதான படுத்துவர்..நானும் அவர்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்தேன்..என் கல்லூரி நண்பர்கள் சிலரும் அப்படிதான்...அவருக்கு திடீர் என வந்த முடிவு எல்லோருக்கும் மிக சோகமாக இருந்தது...

   அந்த சோகம் ஒரு நாள் முடிந்து விட வில்லை.நண்பன் அம்மாவுக்காக அழுது வெளியே எங்கும் செல்லாமல் கொஞ்ச நாள் வீட்டிலே இருந்தார்கள்...அவ்வப்பொழுது நண்பரை பார்க்க செல்லும் நான் அவனின் நிலை கண்டு வருந்தி இருக்கிறேன்..இரண்டு மாதங்கள் அவன் அதையே நினைத்து கொண்டும் அம்மா பற்றியே பேசி கொண்டும் இருந்தான்...நல்ல வேலை அவனுக்கு புதிதாக ககிடைத்த  வேலை கொஞ்சம் கொஞ்சமாக சோகத்தில் இருந்து விடுபட செய்தது..

   இவரின் திடீர் மரணம் என்னையும் நிறைய சிந்திக்க வைத்தது...
ஒருவரின் வாழ்வில் எதிர்பாராத சம்பவங்கள் நிறைய நடக்கும்..இது போலதான் என் அத்தையின் மரணமும் எதிர்பாராமல் நடந்து எங்களுக்கு பெரிய இழப்பை கொடுத்தது...நம் மனதை கடினப்படுத்தி கொள்ள வேண்டும்..காலம் ஒன்றே நிறைய விசயங்களுக்கு மருந்தாக இருக்கிறது..இறைவனின் திட்டம் நாம் அறிய முடியாது.


 இன்னும் சில விஷயங்கள் இந்த கட்டுரையில் நண்பர்களுக்கு சொல்ல விரும்புகிறேன் ...நமக்கு வந்த முக்கிய பிரச்சினைக்கள் எல்லாவற்றையும் மனதில் வைத்து மன அழுத்தம் கொடுக்காமல் பக்குவம் உள்ள உறவினர்கள் நண்பர்களிடம் விவாதிக்க வேண்டும்..தீர்வு கிடைக்கும் என்பதற்காக அல்ல.நம் மன அழுத்தத்தை குறைக்க அது உதவும்...இன்று இந்த அன்னையை போல நம் வீட்டிலும் அலுவலகத்திலும் உழைக்கும் பெண்கள் பலர்  மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள் ..அவர்களை கணவனாக நண்பராக சகோதரனாக மகனாக இன்னும் புரிந்து கொண்டு அவர்களின் வீட்டு வேலைகளிலும் அலுவலக பிரச்சினைகளிலும் துணை நிற்க வேண்டும்...என் நண்பனின் வீட்டில் எல்லா உறவுகளும் நன்றாக அமைந்து இருந்தாலும் அன்னை அவர்கள் வேலை பளுவை வெளியே காட்டி கொள்ளாமல் இருந்த மன அழுத்தம்தான் மரணம் வரை கொண்டுவிட்டது..என் நண்பனின் குடும்பம் இன்றும் என்னிடம் எல்லா விசயங்களை குடும்பத்தில் ஒருவராக பகிரும் போது நட்பு எதையும் எதிர் பார்க்காமல் குடும்ப உறவுகளுடன் மற்ற உறவுகளை தள்ளி ஒரு படி முந்தி செல்கிறது....நம்மை விட்டு பிரிந்த அன்புக்குரிய மனிதர்கள் இன்றும் தெய்வமாக நம்மில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்..நான் மட்டும் அல்ல நம்மில் பலரும் இது போன்ற கசப்பான நிகழ்வுகளுடன் பிரிந்த மனிதர்களை தெய்வமாக நினைத்து கொண்டு இருக்கிறோம்...
















Tuesday, April 9, 2013

தமிழ் மொழி இனி .....

கடந்த முறை திருச்சி சென்ற போது திருச்சி வானவில் பண்பலை வானொலி நிகழ்ச்சி ஒன்றை கேட்க நேர்ந்தது. மாலை நிகழ்ச்சி...திரைப்பட பாடல்கள் வழங்கும் நிகழ்ச்சி..தொகுப்பாளர்கள் தூய தமிழில் பேசி தமிழ் இலக்கியங்களில் இருந்து உவமைகள் வழங்கி ஒலி பரப்பு செய்தது மனதை தொட்டது.. சிறிய வயதில் கேட்டது. இப்பொழுது தொலைக்காட்சி மியூசிக் சானல்கள் தனியார் பண்பலைகளில் சில நிகழ்சிகள் தமிழை கொல்லும் போது இவர்களின் நிகழ்சிகள் போல உலகெங்கும் தூய தமிழை கேட்க்க செய்ய வேண்டும் என்ற உணர்வு... இன்னொரு நிகழ்வையும் பகிர ஆசை படுகிறேன். ரயிலில் செல்லும் போது என் பள்ளி நண்பரை அவர் குடும்பத்துடன் சந்தித்தேன். என்னை போல அவரும் கணி பொறி துறையில் பெங்களூரில் வேலை செய்கிறார்..அவரின் மூன்று வயது குழந்தை பெற்றோர்களை மம்மி டாடி என்று அழைப்பதும் பெற்றோரும் ஆங்கிலத்தில் விளக்குவதும் என இருந்தனர்..நான் நண்பரிடம் தமிழகத்தில் அருகில் இருந்தே நாம் தாய் மொழியை விட்டு குடும்பத்தில் பேசும் அவசியம் என்னவோ என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் "குழந்தைக்கு தமிழ் கல்வி இங்கு கிடைக்க வில்லை..தமிழ் படித்து என்ன பயன் நண்பா?" தமிழ் மொழி இனி .....



Monday, April 8, 2013

நீயே நிரந்தரம்

இறப்புக்காக நாட்களை எண்ணி கொண்டு இருக்கும் ஒருவரிடம் உங்களுக்காக வேண்டி கொள்ளுகிறேன் ஆத்திகனின் பதில்; நாத்திகனின் மௌனம்..இரண்டும் ஆறுதல் கொடுக்குமா என்று தெரியவில்லை. நேற்று இருவரை சந்தித்து நான் பேசிய போது சிந்தித்தது. நமக்கு அந்த நிலை வரும் போதுதான் தெரியும். கடைசியில் எங்கே போகிறோம் என்று தெரிவதில்லை..ஆனால் சாதி மதம் இனம் என்று பிரித்து மற்றவர்களின் உணர்வை கொன்று விடுகிறோம்..மனிதம் என்பதை மறந்து விட்டு ஆன்மீகம் பேசுவதில் அர்த்தம் இல்லை. திருச்சி பாலக்கரை RCMC கலலரையின் நுழை வாயில் அருகே நான் சிறு வயதில் பார்த்த வாக்கியம் "வா இது முடிவல்ல..இன்னொரு தொடக்கம் " (ஆனால் இப்பொழுது அழித்து விட்டார்கள்). இறப்புக்கு பிறகு இன்னொரு வாழ்வு என்ற சமயங்கள் சொல்வதைதான் நினைவுபடுத்தும்..இறப்பு என்பது எல்லோருக்கு நிச்சயம்..ஆனால் எப்பொழுது என்பதுதான் ரகசியமாக ...இது போன்ற பதில் தர முடியாத கேள்விகளுக்கு மனிதனின் தேடல்தான் ஆன்மீகம். வழிகள் பல ஆனால் செல்லும் இடம் ஒன்றுதான். எல்லாம் மனிதனின் அறிவுக்கு உட்பட்டு இருந்தால் மிருகமாகத்தான் இருப்பான்..உதாரணமாக ஈழம் பற்றி நாம் விவாதிக்கிறோம்..எல்லாம் படு கொலை நடந்த பிறகே..இவ்வளவு உணர்வாளர்கள் அப்பொழுதே இருந்தார்களா?? அவர்களின் இறப்பு நம்மில் பலருக்கு உணர்வின் பிறப்பு....ஒரு முடிவில் ஒரு ஆரம்பம் இதுதான் வாழ்க்கை வேதம்.அறவியல் வளர்ந்து இருக்கிறது..மனிதம்தான் இன்னும் உயர் வில்லை..கண்டுபிடிப்புக்கள் வசதியை தந்து இருக்கலாம்..சந்தோசத்தை அல்ல...அன்பே கடவுள் என்றுதான் எல்லா மதங்களும் சொல்கின்றன..பகுத்தறிவு பேசுவர்களும் பிறருக்கு உதவும் அன்பு பற்றி பேசுகிறார்கள்..கூட்டி கழித்து பார்த்தால் எல்லா தத்துவங்களும் பிறர் அன்பையும் அதனால் வரும் சந்தோசத்தையும் இலக்கணமாக சொல்கின்றனர்..கடவுள் என்ற வார்த்தையை அந்த தத்துவத்தில் சேர்த்தால் அது ஆத்திகம் ...இல்லையென்றால் அது நாத்திகம்....கடவுள் (God ) என்ற வார்த்தைதான் அதிகம் விமர்ச்சனகளுக்கு உள்ளாகும் வார்த்தை..எதுவும் நிரந்தரம் இல்லாத உலகில் நிரந்தரம் என்பதே கடவுள்தான்..நாளை நாம் இருப்போமோ இல்லையோ கடவுளை பற்றிய தேடலும் விமர்சனமும் உலகில் இருந்து கொண்டுதான் இருக்கும் ..

Monday, March 25, 2013

ஹரி தாஸ்...மனதில் நின்ற திரைப்படம்...

ஹரி தாஸ் ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என்று சொன்னால் மிகை ஆகாது..வழக்கு எண் 16/9 திரைப்படத்துக்கு பிறகு ஒரு அருமையான திரைபடத்தை பார்த்த மன நிறைவு கிடைத்தது.ஒரு ஆண் குழந்தையின் தந்தையாக பார்க்கும் போது திரை கதையுடன் மனமும் ஒத்து பார்க்க முடிந்தது..தந்தை மகன் பேசும் காட்சிகள் திரையில் ஒரு கவிதையாக தோன்றியது .கிஷோர் மிக நன்றாக நடித்து இருந்தார்...நவீன தொழில் நுட்பம் பெரிய பட்ஜெட்டில் கனவு டூயட் பாடல்கள் மையமாக கொண்டு எடுக்கும் திரைபடங்களில் நடுவில் இது போன்ற யதார்த்தமான வாழும் காலத்திற்கு ஏற்ற படங்கள் இன்னும் தமிழில் நிறைய வர வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் காலம் தாமதம் ஆனாலும் பட குழுவினருக்கு என்னால் ஆன பாராட்டு பதிவு. தேசிய விருதுக்கு அனுப்ப பட்டதா என்று தெரிய வில்லை..அங்காடி தெருவுக்கு தேசிய விருது கிடைக்காதது போல இந்த படத்துக்கும் நழுவி சென்றதா என்று தெரிய வில்லை..ஆனால் இது நல்ல திரைப்படம் என்பதை யாராலும் மறுக்க முடியாது .நன்றி.

Sunday, March 10, 2013

என்றும் வாழும் ஒரு தமிழ் புரட்சியாளர்.

மென் பொருள் பொறியாளராக வேலைக்கு சேர்ந்தவுடன் மிக அதிக பக்கங்கள் கொண்ட புத்தங்கங்களை  படிக்கும் பழக்கம் குறைந்தது.. மென் பொருள் ஜாவா சம்பத்தப்பட்ட புத்தகங்களை படிப்பதோடு சரி. பொது அறிவை தேட நாளிதழ்களும் ஆனந்த விகடன் பத்திரிகையோடு  தமிழ் பைபிள் என் தமிழ் வாசிப்பு இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு தமிழ் புத்தகத்தை படித்தேன் . "பிரபாரகரன் ஒரு  வாழ்க்கை" . எழுத்தாளர் "செல்லமுத்து குப்புசாமி". இலங்கையில் இன படு கொலை நடந்த சமயம் நான் நண்பர்களின் விவாதத்திலும் facebook பதிவுகளிலும் பார்த்து எனக்குள் எழுந்த தமிழ் உணர்வுகளின்  எழுச்சியாக விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழக்கையை  இன்னும் அறிந்து கொண்டேன். முப்பத்தைந்து ஆண்டுகள் அஹிம்சை வழியில் ஈழதில் நடந்த அற போராட்டதில் யாழ்ப்பாண தமிழர்கள் சிங்கள வெறியர்களால் நசுக்கப்பட்டனர். ஆங்கிலயர்கள் கூட அந்த அளவுக்கு இந்தியாவில் கொடுமைகள் செய்ய வில்லை..அந்த சமயத்தில்தான் சிறுவர் பிர்பக்கரனுக்கு உலகெங்கும் நடந்த புரட்சி வரலாறு டியூஷன் ஆசிரியர் மூலம் விதைக்க பட்டது...இன வெறிக்கு எதிராக துப்பாக்கி எடுத்தார்..ஒரு ராணுவத்தையே உருவாக்கினார் MGR இந்திரா காந்தி போன்றவர்கள் ஆயுத உதவி செய்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.இந்திரா இறந்த பிறகு ராஜீவ் காந்தி பிரதமர் ஆக இருந்த போது இந்திய அரசின் போக்கு மாறியது..அங்கு வருவது போல இந்தியாவிலும் தமிழர்கள் தனி நாடு கேட்பார்களோ என்ற பயம் வந்தது.அதன் கோர முடிவுதான் அமைதி படை..சில தலைவர்களின் கொலை பின்னணி.ராஜீவ் கொலைக்கு பிறகு தமிழகத்திலும் இவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது.. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமி இவர்களின் வாழ்வில் பெரும் சேதத்தை ஆற்றியது.இவர்களே மக்களின் நிவாரண பணிகளை செய்தனர்..இறுதியில் இப்போது இருக்கும் ராஜபட்சே என்ற அரக்கனின் ராணுவத்தை கொண்டு இனம் பேரழிவுக்கு ஆளாகியது.. பிரபல பத்திரிகையாளர் அனிதா அவர்கள் இவரை பேட்டி எடுக்க சென்ற போது ஒரு இரவு தங்கி இருந்தார்.. இந்தியா திரும்பி வந்தவுடன் அவர் சொல்லியது "இந்திய ராணுவத்திடமும் டெல்லியிலும் இல்லாத பெண் பாதுகாப்பை ஒழுக்கத்தை விடுதலை புலிகளிடம் கண்டேன்.". பெண்கள் பலர் இருந்தாலும் ஒரு ஒழுக்கமான அமைப்பாக காத்து வந்ததார் என்கிறது வரலாறு. சாதி மதம் அவர்கள் பார்க்க வில்லை. பிரபாகர் மதி தம்பதியினர்  தன் முதல் பயனுக்கு இறந்து போன போராளி கிறிஸ்தவர் பெயர் சார்லஸ் என்று வைத்தார்கள் . புலிகளின ஒவ்வொரு தாக்குதலும் எதிரிகளின் பதில் தாக்குதலாகவே இருந்தது. அமைதி முறையில் சந்திப்புக்கள் நடந்த போதெல்லாம் அமைதியாகவே பேச முன் வந்தனர் புலிகள். எப்படி இங்கு வாஞ்சி நாதன் பகத்சிங் நேதாஜி விடுதலை போராட்டதிற்கு ஆயுதம் எடுத்தார்களோ அவ்வாறுதான் இவர்கள் போராட்டமும்..இவர்களை இந்திய எப்படி பயங்கரவாதி என்று சொல்லாதோ அது போலத்தான் தமிழர்களும் இவர்களை அப்படி சொல்ல மாட்டார்கள். சொந்த நலனை கூட கருதாமல் ஒரே இலட்சியத்துடன் போராடி உயிரை துறந்த புலிகளை  மாமனிதர்களாக இந்த புத்தகம் படித்தவுடன் பார்க்க தொடங்கியது. இங்கு தமிழ் என்று சொல்லி ஒரு கூட்டம் பணத் திமிரிலும் ஊழலிலும் ஆட்டம் போட்ட போடுதான் அங்கு தம் இனம் காக்க பலர் உயிர் துறந்தனர். இந்த புத்தகத்தில் இரண்டு தமிழ் தலைவர்கள் பற்றி பாராட்டி எழுதினார் என்றால் அவர்களில் MGR வைகோ இருவரும்தான். தொடக்க காலத்தில்  ஆயுத உதவிகள் செய்தவர் ஒருவர் இன்னொருவர் பாராளு மன்ற கூட்டங்களில் அவர்களுக்காக இந்திய அரசிடம் போராடியவர். நெடு மாறன்  அவர்களின் தொடக்க காலத்தில் இருந்து ஆதரவு தந்த தலைவர் ஆவார் . சீமான்  இங்கு மக்களிடையே விழிபுனர்வுகளை ஏற்படுதியடையும மறுக்க முடியாது.. அங்கு இரண்டாம் உலக போருக்கு பிறகு நடந்த பெரிய இன படுகொலை என்பதை யாராலும் மறுக்க முடியாது.. நம் மொழி பேசும் மக்கள்.தமிழ் வளர்ப்போம் என்று சொல்லி தமிழ் பேசும் மக்களை அழித்தல்; அழிக்க துணை இருத்தல் எவ்வளவு துரோகம். இனி மேல் நாம் சிந்திப்போம். இவர்களுக்கு இனி மேல் வரும் தேர்தல்களிலும் பாடம் புகட்டுவோம். இலங்கை தமிழருக்காக நடக்கும் போராட்டங்களை ஆதரிப்போம். நாம் எங்கு இருந்தாலும் தமிழ் மொழியையும் தமிழ் பண்பாட்டையும்  பேணி வளர்ப்போம். நம் தலை முறைகள் தமிழ் மொழியே பேசட்டும்.அறிவியல் புத்தங்கங்கள் தமிழில் மொழி பெயர்போம்..தமிழ் இருந்தால்தான் நம் பண்பாடு நம்மில் இருக்கும். அறிவியல் மட்டும் மனித வாழ்வை மேம்படுட்ட முடியாது...வாழ்க தமிழ்!!!வளர்க மனித நேயம்!!!என்னால் முடிந்த ஒரு சிறு பதிவு என் இணைய நண்பர்களுக்காக...